Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்ஜூன் 3; உலக சைக்கிள் தினம்...வாங்களேன்! ஒரு ட்ரிப் போவோம்!

    ஜூன் 3; உலக சைக்கிள் தினம்…வாங்களேன்! ஒரு ட்ரிப் போவோம்!

    ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை.. வானம் மாறவில்லை; வான் மதியும் மீனும் கடல் காற்றும், மலரும் மண்ணும் கொடியும் சோலையும்.. நதியும் மாறவில்லை.. மனிதன் மனிதன் மாறிவிட்டான்.. மதத்தில் ஏறிவிட்டான்..’

    ‘ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே.., உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே..!!’

    ‘அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே.., பைய பைய ஒதுங்காதே, பள்ளம் பார்த்து போகாதே.’

    ‘என்ன ராமலிங்கம் ஆளையே பாக்க முடியலையே எப்படி இருக்க..’ (குறிப்பு: வடிவேலு மாதிரி படிக்கவும்)

    இப்படி மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி முதல் வைகைப்புயல் வடிவேலு வரை பலரும் தாங்கள் நடித்த பல திரைப்படங்களில் சைக்கிளினை உபயோகித்துள்ளனர்.

    காலங்கள் கடந்தாலும், மக்களின் ரசனை பலவிதங்களில் மாறினாலும்.. மேற்கூறிய நிகழ்ச்சிகள் அழியா காவியமாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    சைக்கிள் என்னும் பெருங்கனவு..

    ஓவ்வொருவரது வாழ்க்கையிலும் சைக்கிள், பல விதமான நினைவுகளை உண்டாக்கி இருக்கும். சிறுவயதில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும்பாலான விபத்துக்கள் சைக்கிளில் சென்று ஏற்பட்டதாகவே இருக்கும்.

    சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தது வரை, ஒற்றைக்கை விட்டு ஓட்டுதல், இரண்டு கைகளையும் விட்டு ஓட்டுதல், குரங்கு பெடல் என்னும் முறையில் ஓட்டுதல் என சைக்கிள் பற்றிய நமது நினைவுகள் ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு நமது மனதில் விரவிக்கிடக்கின்றது.

    பெரும்பாலான வீடுகளில் தந்தை ஓட்டிச்செல்வதற்காக என்று ஒரு பெரிய சைக்கிள் மட்டுமே இருக்கும். சிறு பிள்ளைகளை இருக்கும் நமக்கு அந்த சைக்கிள்கள் ஒரு எட்டாக்கனியாக மட்டுமே தெரியும். 

    இந்த எட்டாக்கனியினை, எட்டும் கனியாக மாற்றிய பெருமை ஒவ்வொரு தெருக்களில் இருக்கும் சைக்கிள் கடைக்காரர் என்னும் தெய்வத்தினையே சேரும்.

    அட ஆமாங்க.. தினமும் நமக்கு கிடைக்கின்ற ஒன்று இரண்டு ரூபாய்களை சேர்த்து வைத்து எப்போ விடுமுறை வரும் என்று காத்திருந்து, வாரத்தின் இறுதி நாள் விடியும் முன்பே, கடைக்காரர் கடையினைத் திறக்கும் முன்பே.. முதல் ஆளாக அந்த கடைக்கு முன்பு நாம் இருப்போம்.

    வண்ண வண்ண நிறத்தில் நமக்கு ஏற்ற உயரத்தில் இருக்கும் சைக்கிளினை எடுத்து ஓட்டுவதற்கு அந்த சைக்கிள் கடைக்கார தெய்வம் நம்மிடம் கேட்கும் தொகை ஐந்து ரூபாய்க்குள் தான் இருக்கும்.

    ஆனால், அந்த ஐந்து ருபாய் நமது சிறுவயது காலத்தில் பெரிய தொகைதான் என்றாலும், நமது கனவான சைக்கிளினைத் தொட்டு ஒரு மணி நேரம் பயணம் செய்யும் சுகத்தின் முன்பு மிகச் சிறியது தான்.

    இந்த வாடகை சைக்கிளினை வாங்குவதற்கு விடுமுறை தினத்தில் பெரிய சண்டையே நடக்கும்.. வயதில் நம்மைவிட பெரியவர்கள் நமக்கு மிகப் பிடித்த சைக்கிளினை எடுத்துச் செல்லும் போது வரும் அழுகை கலந்த ஆத்திரமெல்லாம் நீங்காத நினைவுகளாய் இன்றும் நம் மனதில் பதிந்திருக்கும்.

    சைக்கிள் ஓட்டத்தெரியாமல் இருந்தாலும் வடைக்கு வாங்கிய சைக்கிளினை ஒருமணி நேரம் உருட்டிச் சென்றவர்களும் நம்மிடையே இருப்பார்கள். (சம்பந்தமே இல்லாம இந்த வரி எதுக்குன்னு நீங்க கேக்குறது தெரியுது) அடியேனும் அந்த வகையறாவினைச் சேர்ந்தவன் தான்.

    சிறு வயதில் சைக்கிள் ஓட்ட ஆசை இருந்தாலும் ‘கீழே விழுந்தால் வலிக்குமே!!’ என்ற பயம் அதிகமாக இருந்ததன் காரணமாக வாடகைக்கு வாங்கிய சைக்கிளினை பல காலம் உருட்டியே சென்றுள்ளேன். சமாளிப்போம்..

    ஆயுத பூஜை, பொங்கல் காலங்களில் வீடுகளில் இருக்கும் சைக்கிளினை சுத்தப்படுத்துவதற்கும் பெரிய சண்டை நடக்கும்.. வீட்டில் பல வேலைகள் செய்யச்சொல்லி நம்மைக் கட்டாயப் படுத்தி செய்யச் சொன்னாலும் செய்யாத நாம்.. யாரும் சொல்லாமலே சைக்கிளினை கழுவி சுத்தம் செய்வதெல்லாம் நமது பெற்றோருக்கு நிஜத்தில் நடக்கும் கனவு போலவே தோன்றும்.

    இப்படி நமக்கு விவரம் தெரியாத காலத்திலிருந்தே ஒரு நண்பனாய், நமது பயணத்தின் ஒரு அங்கமாய், ஒரு கனவாய், ஒரு பேராசையாய் சைக்கிள் இருந்துள்ளது.

    காலங்கள் கடந்து நமக்கு வயதாகிய போதும் சைக்கிளைனைப் பார்க்கும் போதும், அதனை ஓட்டும் போதும் வரும் குதூகலமும், மன நிம்மதியும், அதனால் தோன்றும் கடையோரத்து சிறு புன்னகையும் விலைமதிப்பில்லாத ஒன்று.

    மகிழ்ச்சிக்கான வழி..

    இன்று நம்மிடையே காசு உள்ளது. பல ரூபாய் செலவு செய்து ஒரு சைக்கிள் வாங்கும் வசதியும் நம்மிடையே உள்ளது. ஆனால் அந்த பழைய நினைவுகளும், சைக்கிளின் மேல் இருந்த அந்த அபரிமிதமான காதலும் இன்று இல்லை.

    வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தின் வேகத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் வேகத்திற்கு சைக்கிள்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

    மக்கள் பயணத்தின் அருமையினை ரசிப்பதை விட வேகமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதினையே அதிகம் விரும்புகின்றனர். இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு சைக்கிள்கள் பிடிப்பதில்லை.

    ஒரு காலத்தில் பலரின் நினைவுகளை, பலரின் கனவுகளை சுமந்துச் சென்ற சைக்கிள்கள், ஒவ்வொரு வீட்டிலும் கவனிப்பாரற்ற நிலையில் ஒரு மூலையில் தங்களது பெருமையினை இழந்து கிடக்கின்றன.

    இன்று உலக சைக்கிள் தினம்.. சைக்கிள்கள் அற்புதமானவை. நமது எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப நமது பயணத்தினை மாற்றும் சக்தியுள்ளவை.

    நமது உடல் ஆரோக்கியமாக இருக்கவும், மனதில் உள்ள அழுத்தம் குறைந்து லேசாக இருக்கவும் உதவுகின்றன. தன்னிலை பற்றி யோசிக்கவும், ஒரு பயணத்தின் அருமையினை நமக்கு அளிக்கவும் சைக்கிள்கள் துணை புரிகின்றன.

    ‘ஒரு சைக்கிளினை ஓட்டிச்செல்லும் போது உங்களால் சோகமாக இருக்க முடியாது.’ இந்த இனிமையான நாளில் சைக்கிள் நமக்கு கொடுத்த இனிப்பான நினைவுகளை நினைத்து பார்ப்போம். கேட்பாரற்று கிடைக்கும் சைக்கிளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்குவோம்..

    இன்னும் கட்டுரை முடியல.. அதுக்குள்ள எங்க போறீங்க?? ஓ!! புரிந்து விட்டது.. 

    பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்ற ஜானி டெப்.. திரையுலகிற்கு திரும்புவாரா??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....