Monday, March 18, 2024
மேலும்
  Homeஆன்மிகம்ஆன்மீகப் பார்வையில், அற்புதம் நிறைந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்!

  ஆன்மீகப் பார்வையில், அற்புதம் நிறைந்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்!

  தமிழ்க்கடவுள் முருகரின் ஆறுபடைக் கோயில்களை அறியாதோர் இல்லை எனலாம். அந்த அளவிற்கு முருகரின் புகழ் பரவியிள்ளது.

  மேலும், ஏழாம் படையாக மருதமலை முருகர் கோயில், முருகரின் சிறப்பை எடுத்துரைக்கிறது. இன்று நாம் காணவிருப்பது, சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி முருகர் கோயில். சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் அமைந்திருக்கிறது சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்.

  சிறுவாபுரியின் நுழைவு வாயிலில், சப்த மாதர் கோயிலும், நடுநாயகத்தில் அகத்தீஸ்வரர் கோயிலும் மேற்கு திசையில் பெருமாள் கோயிலும், இதற்குப் பின்புறம் விஷ்ணுதுர்கை கோயில்களும் உள்ளன. வடக்கு திசையின் வாயு மூலையில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம், ரம்மியமாக நம் விழிகளுக்கு காட்சி அளிக்கிறது. அருணகிரி நாதரால், போற்றிப் பாடப்பட்ட சிறப்பானத் தலம் சிறுவாபுரி.

  இத்திருத்தலத்தில் உள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமணியர், ஆதி மூலவர் மற்றும் நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்துமே, மரகதப் பச்சைக் கல்லால் ஆனவை. கோயிலின் உள்ளே உயரமான கொடிமரம் முன் காணப்படும், பச்சை மரகத மயிலின் காட்சி அழகோ அழகு. இது போன்ற மயிலின் சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது மிகவும் அரிது தான்.

  சிறுவாபுரி முருகர் முன் வலக்கரம் அடியவருக்கு அருள் பாலிக்க, பின் வலக்கரம் ஜபமாலையை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலத்தை தாங்கியும் பிரம்ம சாஸ்தா கோலத்தில் காட்சி அளிக்கிறார். பிரம்ம தேவரை தண்டித்து, பிரம்மனின் படைப்புத் தொழிலை ஏற்று, அற்புதக் கோலம் கொண்ட இம்முருகரை, மனம் மகிழ்வோடு வழிபட்டால், வித்தைகள் பல கற்ற பேரறிஞராக மாறலாம் என, அருணகிரி நாதர் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

  படைப்புத் தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிக்கும் முருகரை வழிபடுவதால், வாஸ்து தோஷம் அனைத்தும் நீங்கி, வீடு கட்டுவதில் இருக்கும் சிக்கல்களும், தடைகளும் அகலும் என்பது நம்பிக்கை.

  அசுவமேத யாகம்

  அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட இரகு வம்சத்தின் வழித்தோன்றல் இராமபிரான், யாகப்பசுவாக குதிரையை ஏவி விட்டார். அக்குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்தது. குதிரையை, அங்கு வளர்ந்து வந்த இராமரின் பிள்ளைகளான லவனும், குசனும் கட்டிப்போட்டு சிறை பிடித்தனர். இதை அறிந்து குதிரையை மீட்க வந்த லட்சுமணனாலும், சிறுவர்களான இராமரின் மைந்தர்களை வெல்ல முடியவில்லை.

  இராமரே நேராக வந்து, சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. அப்போது, சிறுவர்களான லவனும் குசனும், தந்தையான இராமரை நோக்கி அம்பு எய்தனர். இவ்வாறு, சிறுவர்கள் அம்பு எய்த இடமே சிறுவாபுரி என்று வழங்கப்பட்டது.

  வழிபாடு 

  சிறுவாபுரி முருகர் கோயில், ஞாயிற்று கிழமை தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பின்னர், பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்க் கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.

  முருகர் மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை, வேறெங்கும் கிடையாது. சிறுவாபுரி முருகப்பெருமானை வணங்குவோருக்கு, திருமணத்தடைகள் அனைத்தும் நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.

  பூமி தொடர்பான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடற்றவர்களுக்கு புதிய வீடு கட்டவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெற்று மகிழ்வோடு வாழவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. முருகர் மீது முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள், நிறைவேறி வருவது முற்றிலும் உண்மையாகும்.

  இதையும் பாருங்கள்.

  சென்னை ஐஐடி’யில் தமிழ்த்தாய் வாழ்த்து – மத்திய கல்வித்துறை தகவல்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....