Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்உலக கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா? மிதாலி மீள்வாரா?

    உலக கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா? மிதாலி மீள்வாரா?

    2022 ஆம் ஆண்டின் மகளிருக்கான உலக கோப்பை போட்டியானது எட்டு அணிகளுடன் நியுசிலாந்து நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. உலக கோப்பை போட்டியில் இன்று இரு போட்டிகள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற, மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாட ஆரம்பித்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும். 

    இப்படியான சூழலில் இந்திய அணியானது தனது  ஆறாவது போட்டியை இன்று விளையாடியது. வங்கதேச அணிக்கு எதிராக இன்று விளையாட ஆரம்பித்த இந்திய அணியானது டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா- ஷஃபாலி வெர்மா இணையானது 74 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் விக்கெட் மூலம் பிரிந்தது. அடுத்து மூன்று பந்துகள் மட்டுமே சந்தித்து ஷஃபாலி வெர்மாவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களத்திற்கு வந்த யாஷ்டிகா பாட்டியா தனது திறமையான ஆட்டத்தால் அரைசதம் அடிக்க அணியின் எண்ணிக்கை 176 ஆக இருந்த போது ரிது மோனி அவர்களின் பந்து வீச்சில் வெளியேறினார். இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தார். தொடர்ந்து சொதப்பலில் இருக்கும் மிதாலி தொடர் ஃபார்முக்கு திரும்புவாரா என்ற கேள்வியை மீண்டும் எழ வைத்துள்ளார்.

    மொத்தத்தில் ஐம்பது ஓவர்களில் இந்திய மகளிர் அணியானது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஐந்து ரன்களுக்கு ஷார்மின் அக்தர் வெளியேறினார். அதன்பிறகு வந்த ஃபர்கானா டக் அவுட்டாகி வெளியேறியது வங்க தேச அணியை இன்னும் பின்னுக்கு தள்ளியது.

    இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி வீரர்கள் களத்திற்கு வருவதும், பெவிலியன் திரும்புவதுமாய் இருந்தனர். இதனால் வங்க தேச அணியானது நாற்பது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

    இந்தியா தரப்பில் ஸ்னேஹ் ரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதோடு  ஜுலன் கோஸ்வாமி 2 விக்கெட்டுகளையும், பூஜா வர்ஸ்த்ராக்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  ஆட்ட நாயகி விருதானது பாட்டியாவுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  

    தற்போதைய நிலவரப்படி, இந்திய அணியானது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நிலைப்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. 

    இந்திய அணியானது தனது அடுத்தப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றால் அரையிறுதி வாய்ப்பானது பிராகசமானதாக மாறிவிடும். வருகின்ற 27 ஆம் தேதி இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....