Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்விளையாட்டுபோராடித் தோற்றது இந்தியா : ஈடன் பார்க்கில் அரைசத மழை !

  போராடித் தோற்றது இந்தியா : ஈடன் பார்க்கில் அரைசத மழை !

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் மெக் லான்னிங் 97 ரன்களைக் குவித்தார்.

  மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் கலந்து கொண்டு லீக் சுற்றுகளில் விளையாடி வருகின்றன. 

  இதன் 18வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கிய இப்போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது.

  டாசை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்கார்களாக ஸ்ம்ரிதி மந்தனாவும், ஷபாலி வெர்மாவும் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ம்ரிதி மந்தனா 3வது ஓவரிலேயே டார்சி ப்ரவுன் பந்துவீச்சில் மெக் லான்னிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷபாலி வெர்மாவும் சிறிது நேரத்தில் டார்சி ப்ரவுன் ஓவரிலேயே வெளியேற அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா மற்றும் மிதாலி ராஜ் இணை நிலைத்து நின்று விளையாடியது. அரைசதம் விளாசிய யாஸ்திகா பாட்டியா 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்பு, சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் மிதாலி ராஜும் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 68 ரன்களைக் குவித்து அலானா கிங் பந்துவீச்சில் ஸ்டம்ப்டு செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் இணை சேர்ந்த பூஜா வஸ்த்ரேக்கரும் அதிரடியாக ஆட இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு,  277 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ரேக்கர் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 34 ரங்களைக் குவித்து கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். ஹர்மன்ப்ரீத் கவுர் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டார்சி ப்ரவுன் 3 விக்கெட்டுகளும், அலானா கிங் 2 விக்கெட்டுகளும், ஜெஸ் ஜோனசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

  அடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு ரேச்சல் ஹெய்னஸ் மற்றும் ஆலிசா ஹெய்லி இணை அற்புதமான தொடக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப்  போராடியும் இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 121 ரன்களை எட்டியபோது ஆலிசா ஹெய்லி இந்தியாவின் சிநேகா ராணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய இவர் 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களைக் குவித்தார். சிறிது நேரத்திலேயே ரேச்சல் ஹெய்னஸும் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த மெக் லான்னிங் மற்றும் எல்லிஸ் பெர்ரி இணை பொறுப்புடன் ஆடி ஆஸ்திரேலிய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அப்பொழுது மழை சிறிது நேரம் குறுக்கிட, இடைவெளிக்குப் பிறகு வந்த எல்லிஸ் பெர்ரி 28 ரன்களில் வெளியேற இந்தியாவுக்கு சிறிதளவு வெற்றி நம்பிக்கை பிறந்தது. இந்நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லான்னிங் அதிர்ச்சிகரகமாக 97 ரன்களில் பூஜா வஸ்த்ரேக்கரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை விட்டு கொடுக்காமல் போராடிய இந்திய அணிக்கு, கடைசி ஓவரை வீச நட்சத்திர பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி வந்தார். ஆனால், 4, 2, 4 என முதல் மூன்று பந்துகளிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா இறுதியில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பூஜா வஸ்த்ரேக்கர் 2 விக்கெட்டுகளும், சிநேகா ராணா மற்றும் மேக்னா சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு துருப்பு சீட்டாக விளங்கிய மெக் லான்னிங் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த போட்டியில் இருதரப்புகளையும் சேர்த்து 5 அரைசதங்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....