Sunday, March 17, 2024
மேலும்
  Homeவாழ்வியல்விவசாயம்மகசூலை அதிகரிக்க உதவும் சணப்பை சாகுபடி!

  மகசூலை அதிகரிக்க உதவும் சணப்பை சாகுபடி!

  மண்வளத்தைப் பாதுகாக்கவும், மகசூலை அதிகரிக்கவும் சணப்பை சாகுபடி அவசியமானதாகும்.

  சணப்பை உற்பத்தியில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது சணப்பை. குறிப்பாக, களர் மற்றும் உவர் நிலத்திலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய ஒரு பயறு வகை தாவரம் தான் சணப்பை.

  விவசாயிகள் மண்ணை வளப்படுத்த, பயிர் சாகுபடிக்கு முன்பாக சணப்பு விதைக்கும் பழக்கம் இன்றுவரையும் இருக்கிறது. காற்றிலுள்ள தழைச்சத்துக்களை, தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்களின் மூலம் சேமிக்கும் தன்மையை சணப்பை கொண்டிருப்பதால், விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு வேகமாக வளர்ந்து, ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரம் மற்றும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் அளிக்கும் தன்மை கொண்டது.

  60 முதல் 90 நாட்களில், ஒரு ஹெக்டரில், 50 முதல் 60 கிலோ தழைச்சத்தை, மண்ணில் நிலை நிறுத்துகின்றது. சணப்பு பயிரினுடைய ஆணி வேர்கள் மண்ணின் ஆழத்துக்குள் ஊடுருவி, நீர் மற்றும் காற்று எளிதாக மண்ணில் புகும்படி செய்கின்றது. மற்ற பயிர்களுடன் உரத்திற்காக போட்டியிடாமல் வளரும் தன்மை கொண்டது.

  சணப்பை பயிரிட்ட பிறகு, பயிர் சுழற்சி முறையில் நெல், தானிய பயிர், மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் போன்றவற்றை பயிரிடலாம். சணப்பை பயிரிட்ட நிலத்தில், நெல் சாகுபடி, உளுந்து மற்றும் துவரை ஆகியவற்றை சாகுபடி செய்யும் போது, 20% முதல் 35% மகசூல் உயர்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

  சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந் தோப்புகளில், மண் பிடிமானம் உயர்ந்து மேல் மண் அரிப்பு தடுக்கப்படுகின்றது. சணப்பு மிக வேகமாக வளரும் தன்மை கொண்டதால், களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், சணப்பையின் இலைகளை கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பதன் மூலம், தீவனச் செலவைக் குறைக்கலாம். அதன் தண்டுப் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார், கயிறு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் விவசாயிகள் சணப்பு சாகுபடியில் ஈடுபட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

  தற்காலத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருவதால், மண்ணின் வளம் மிகவும் மோசமாகி வருகிறது. மண்ணின் வளத்தை மீட்டெடுக்க சணப்பை சாகுபடி செய்வது நல்ல பலனைத் தரும்‌. இயற்கையான முறையில் மண் வளத்தை மேம்படுத்த, பசுந்தாள் உரப் பயிர்களில் ஒன்றான சணப்பையை ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

  மேலும், சணப்பை சாகுபடி செய்து மடக்கி உழுவதால், மண்வளம் காக்கப்படுவதோடு, நன்மை பயக்கும் பூச்சிகளும் பாதுகாக்கப்படும். இதனால், உரம் மற்றும் பூச்சி மருந்து செலவுகளும் குறையும்‌.

  இவ்வாறாக, பலவிதமான சத்துக்களை மண்ணிற்கு அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமது, பல நன்மைகளை செய்யும் சணப்பை பயிரை, சாகுபடிக்கு சுமார் 50 நாட்களுக்கு முன்பாக பயிரிடுவதனால், மண் வளத்தை மேம்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்.

  கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....