Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இமானின் பாடல்களில் வரியும் இசையும் போட்டிப்போடுவதில்லை' - இமான் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    ‘இமானின் பாடல்களில் வரியும் இசையும் போட்டிப்போடுவதில்லை’ – இமான் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    2012-ஆம் ஆண்டு தற்போது உள்ள அளவுக்கு சமூகவலைதளங்களின் வீரியமோ, இணையத்தின் வீரியமோ இருந்தது இல்லை. ஆனால், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் அதிகளவில் இயங்கிக் கொண்டிருந்தது. எது நிகழ்ந்தாலும் அது குறித்த அபிப்ராயங்கள் பேஸ்புக் பதிவுகளில் குவிந்துவிடும். அப்படியாகத்தான், 2012-ன் பிற்பகுயில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியாக, பேஸ்புக் பக்கங்களில் அதுகுறித்த பதிவுகள் மணற்புயல் ஓயும் நேரத்தில் தரையினில் குவியும் மணலைப் போல சேர்ந்தன. அப்படம் யாதெனில், விக்ரம் பிரபு நடிப்பில், பிரபு சாலமன் இயக்கிய கும்கி. 

    பேஸ்புக் தளத்தைத் தாண்டி, இணையத்தில் அதிகம் உலவாத, இல்லாத மனிதர்களிடத்திலும் கும்கி பாடல் ரீங்காரித்துக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், பைரஸி சைட்டுகளில் கும்கி படத்தின் பாடல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதிகளவில் ஒலிபரப்பப்பட்டன. இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் பாடல்கள் அதிகளவில் கொண்டாடப்பட்டது.

    வரிகளலும், இசையிலும் உள்ள எளிமை பாடல்களை எளிதாக வெகுஜன மக்களை சென்றடைந்துவிட்டது. அந்தப் பாடல்கள் தங்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக கும்கி படத்தின் பாடல்கள் இருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘ எல்லா ஊரும் எங்க சொந்த ஊருதாங்கனு’ ஒரு பாடல் ஆரம்பிக்க, ஒரு வாழ்வியலை சாதரணமாக பெரிய சிக்கல்கள் இல்லாமல் சொல்லுகிற, மிக இயல்பான ஒட்டத்தை அந்த பாடல் கொண்டிருக்கும். இப்பாடலில் வரும் தத்தகாரம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 

    இப்பாடல் மட்டுமல்ல, கும்கி திரைப்படத்தின் அனைத்து பாடல்களுக்கும் நடுவே வரும் இசைக்கோர்ப்புகள் பாடலை வேறொரு தளத்திற்கு கொண்டுச் செல்வதாக அமைகின்றன. வேறொரு தளம் என்பது மக்களின் மனதுதான். தற்போதையக் காலக்கட்டத்தில் பலரும் வரிகளை தொந்தரவு செய்யக்கூடிய இசையையே தருகின்றனர். ஆனால், கும்கி படத்தின் பாடல்களில் வரிகள் கேட்போரைத் தெள்ளத்தெளிவாக சென்றடையும். வரிகளில், குரல்களில் ரசிகர்களை மிதக்க விட்டு இசை என்பது வெளியில் தெரியக்கூடிய ஒரு வேராகவே கும்கி படத்தின் பாடல்களில் இருக்கிறது. 

    இந்த தன்மைதான், இப்படத்தின் பாடல்களை அதிகளவில் ரசிகர்கள் முனுமுனுக்க காரணமாக அமைந்தது. அதேநேரம், அர்த்தமில்லாத ஒரு சொல்லை ஒரு ஒசையாக இப்பாடலில் இசையமைப்பாளர் உபயோகித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிறுவர்கள் பலர் அப்பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பச் சொல்லி கேட்டு குதூகலித்தனர். ‘சொயிங் சொயிங்’ என்ற அந்த சொல்லை சிறுவர்கள் தங்களையும் மீறி ஆனந்தமாக பாடித்திரிந்தனர். 

    பல இளைஞர்கள் தங்களின் காதல் சார்ந்த உணர்வை வெளிப்படுத்த கும்கி படத்தின் பாடல்களையே உபயோகித்தனர். ‘ஒன்னும் புரியல சொல்லத் தெரியல’ என்ற பாடலை ஒலிக்கவிட்டு தன் ஒருதலைக் காதலை ஆனந்தமாக உணர்ந்தனர். காதலை சொல்லியப்பின் காதலி/ காதலன் பதிலுக்கு ‘ எப்போ புள்ள சொல்லப்போற’ என்ற பாடலை ஒலிபரப்பினர். காதல் கைசேர்ந்தப் பின் ‘அய்யய்யோ ஆனந்தமே’ என்ற பாடலை ஆத்மாவின் மகிழ்ச்சியாக பாடியும், கேட்டும் மகிழ்ந்தனர். கும்கி திரைப்படத்தின் பாடல்கள் அதிகளவில் பலரால் கேட்கப்பட்டது. கும்கி படத்தின் பாடல்கள்தான் அப்படத்தின் ஆகச்சிறந்த அடையாளமாகவே மாறியது. அப்படியான அடையாளத்தை தந்த இசையமைப்பாளர்தான், டி. இமான். 

    நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி. இமான் 20 வருடங்களுக்குப் பிறகும் இன்றளவும் தமிழ்த் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். டி. இமான் இசையமைத்த விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாணே கண்ணே’ பாடலுக்காக டி. இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். 

    டி.இமான் இசையமைக்கும் திரைப்படங்களில் பாடல் வரிகள் அவ்வளவு எளிதில் சிக்கலுக்கு உள்ளாவதில்லை. இசையோடு வரிகள் போட்டிப்போட வில்லை. மாறாக இசையெனும் நதியில் நீந்தும் ஒரு படகாகவே வரிகள் இருக்கின்றன. ‘நதியில் செல்லும் ஒரு படகு’ போன்ற காட்சிதான் டி.இமானின் பாடல்கள். 

    இப்படியான இசையமைப்பாளர் டி.இமானுக்கு இன்று 40-ஆவது அகவை தினம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....