Monday, March 20, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசு பள்ளியில் இருந்து விரட்டி அடிக்கப்படும் தமிழ் வழிக்கல்வி விலைபோன மக்களால் அழியும் கல்விமுறை -...

    அரசு பள்ளியில் இருந்து விரட்டி அடிக்கப்படும் தமிழ் வழிக்கல்வி விலைபோன மக்களால் அழியும் கல்விமுறை – மருத்துவர் இராமதாஸ் சாடல்

    தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட அரசு பள்ளிகள் உள்ளனவா என்ற கேள்வி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலாக 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், தமிழ்நாட்டில் 54 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டும் தான் கல்வி பயிற்றுவிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை விட பெரிய தலைகுனிவு தமிழர்களுக்கு இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தியிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதற்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தி, ஏராளமான உயிர்களை தியாகம் செய்த  தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை நினைக்கவே கவலையாக உள்ளது என்றும் இத்தகைய நிலையை ஏற்படுத்தியது அரசு தான் என்பது வேதனை அளிக்கிறது என்பதையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    anbil mahesh

    ‘‘54 அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பது தவறு; தமிழ் வழி வகுப்புகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை; அனைத்து மாணவர்களும் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பது தான் சரி’’ என்று ஆங்கில பயிற்று மொழி பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது அரசின் தவறை முற்றிலுமாக மறைத்து விட்டு, மாணவர்கள் மீது பழி போடும் செயலாகும் என ராமதாஸ் அவர்கள் சாடியுள்ளார்.

    “2006-11 தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வலிந்து திணிக்கப்பட்டது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனால், அரசு பள்ளிகள் உட்பட 50000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. அதையும் கடந்து தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது” என்றும் தெரிவித்தார், ராமதாஸ்.

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்ட போதெல்லாம், அதற்காக அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், ஆங்கில வழிக் கல்வியை மாணவர்களும், பெற்றோரும் விரும்புகிறார்கள் என்பது தான். அறியாதவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக மருந்துக்கு பதிலாக நஞ்சை புகட்ட முடியாது என்பதைப் போல, மாணவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக தரமான தமிழ்வழிக் கல்வியை வழங்குவதற்கு பதிலாக அரைகுறை ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசு வழங்கியிருக்கக் கூடாது; அது தவறு என்ற கருத்தையும் தனது அறிக்கையில் இராமதாஸ் அவர்கள் முன் வைத்துள்ளார். 

    அறிவியல் சொற்களை தமிழில் உருவாக்க முடியாமல் போய்விட்டது என்று 1975-ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போது கலைஞர் வேதனை தெரிவித்தார் என்பதை நினைவுக் கூர்ந்த இராமதாஸ் அவர்கள், தாய்மொழிவழிக் கல்வி எதற்கும் குறைந்ததல்ல என்றார்.

    அறிக்கையின் இறுதியில் சீனா, ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்தி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...