லூசிஃபர் போன்ற ஒரு திரைப்படத்தை தந்துவிட்டு அதற்கு முற்றிலும் மாறுபட்ட ப்ரோ டாடி போன்ற ஒரு திரைப்படத்தை பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் தந்ததே வியப்புக்குரிய ஒன்றுதான். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்க கூடிய திரைப்படம் தான், ப்ரோ டாடி!
மோகன்லால் மற்றும் மீனா தம்பதியரின் மகன் பிரித்விராஜ். லல்லு அலெக்ஸ் மற்றும் கன்னிகா தம்பதியரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இரு குடும்பங்களும் நெடுங்காலமாக நட்பில் உள்ளவை. இரு குடும்பத்திற்கும் தெரியாமல் பிரித்விராஜும் கல்யாணி பிரியதர்ஷனும் ‘லிவ்-இன்’னில் வாழ்ந்து வர..எதிர்பாராத விதமாக கல்யாணி பிரியதர்ஷின் கர்ப்பமாகி விடுகிறார். அதே சமயத்தில் பிரித்விராஜின் அம்மா மீனா அவர்களும் கர்ப்பமாகி விடுகிறார். இந்த இரு நிகழ்வுகளால் ஏற்படும் அழகிய கலாட்டாக்கள்தான், ப்ரோ டாடி!
மேற்கூறிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதை, நகைச்சுவை நதியாய் செல்லும் பாங்கை உடையதாய் இருக்கிறது. ஆங்காங்கே ஆறு தேங்கியதாய் தோன்றினாலும், உடனுக்குடன் வரும் நகைச்சுவை மழை, அத்தேக்கத்தை சில நிமிடங்களிலேயே பாயும் ஆறாய் மாற்றிவிடுகிறது. மோகன்லாலை இப்படியான தோற்றத்தில் காண்பதென்பது, நம்மை மேலும் இரசிக்க வைக்கும்படியாகவே இருக்கிறது. திரைக்கதையில் நிகழும் நகைச்சுவைகள் இயல்பாய் அழகாய் நிகழ்கின்றன.
மோகன்லாலின் துருதுரு குறும்புகள், மேனரிசம்கள், சிறிய சிறிய அசைவுகளென அனைத்தும் படம் பார்ப்பவர்களை கவர்ந்து விடுகின்றன. திரைப்படத்தில் இருக்கும் அனைவரும் தேவையான அளவு நடிப்பை தந்தாலும், மற்ற அனைவரை விடவும் மோகன்லால் தொடர்ச்சியாய் நான் மேலே என்பதை நிருபித்த வண்ணம் உள்ளார். மீனா, கன்னிகா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நம்மை கவர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஶ்ரீஜித் மற்றும் பிபின் மலேக்கல் ஆகியோர் கதை, திரைக்கதை பணிகளை மேற்கொள்ள பிரித்வி ராஜ் அவர்கள் திரைப்படத்தை இயக்கவும், நடிக்கவும் மட்டுமே செய்திருக்கிறார். லல்லு அலெக்ஸ் மற்றும் கன்னிகா தம்பதியரின் காட்சிகள் வெறுமனே நகைச்சுவை மட்டுமன்றி, மற்றவை சிலவும் சேர்ந்திருப்பது கூடுதல் பலமாய் தெரிகிறது. லல்லு அலெக்ஸின் காட்சிகள்தான் நகைச்சுவையை தவிர்த்து பிற உணர்வுகளையும் சுமந்து ப்ரோ டாடி திரைப்படத்திற்கு மற்றொரு பரிணாமத்தை தருகின்றன.

அதே சமயம், லல்லு அலெக்ஸின் விளம்பர பணிகள் சார்ந்து வரும் காட்சிகள் பெரியதாய் எடுபடவில்லை. திருமண பணிகள் செய்வதாக காட்சிப்படுத்தப்படும் சௌபினின் காதாப்பாத்திரமும் பெரியதாய் எடுபடவில்லை.
கதையை அச்சுப் பிசறாமல் எதிர்பார்ப்போர், முற்போக்குச் சிந்தனையை எதிர்பார்ப்போர் இப்படத்தை அனுகினால் ஏமாற்றமே! இவற்றை சார்ந்த எவற்றையும் எதிர்ப்பார்க்காமல் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை பார்ப்பவர்கள்..பார்க்கலாம் என்பவர்கள் நிச்சயமாக, ப்ரோ டாடி திரைப்படத்தைக் காணலாம்!