Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இவர்கள் மட்டும்தான் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? - கொதித்த அன்புமணி ராமதாஸ்!

    ‘இவர்கள் மட்டும்தான் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? – கொதித்த அன்புமணி ராமதாஸ்!

    தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரிக்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

    அறிக்கை ; 

    பலரும் இது குறித்து கண்டனங்களைத் தெரிவித்து வர, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் அவர்கள் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித் தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது என்றும், மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறது எனவும், இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும் தான் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணிகளில் நுழைந்து விடுவதை தடுக்க அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

    இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    “குழந்தை பாதுகாப்பு என்பது குடிமைப் பணிகளில் ஒன்று தான். எந்த ஒரு பட்டப்படிப்பையும் படித்து, குழந்தை  பாதுகாப்பு குறித்த விஷயங்களில் பயிற்சியை பெற்றுக் கொண்டால் இந்த பணியை சிறப்பாக செய்ய முடியும். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பணியாக கருதப்படும் குடிமைப் பணிகளுக்குக் கூட  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சிறப்பாக கையாளுகின்றனர். அதனால் குறிப்பிட்ட 5 படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அநீதியாகும்” என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

    குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; அப்பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள் வழக்கம் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பதுடன், அதற்கேற்ற வகையில் கூடுதல் அவகாசத்துடன் திருத்தப்பட்ட அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....