Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - அன்புமணி இராமதாஸ் பெருமிதம்!

    இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி – அன்புமணி இராமதாஸ் பெருமிதம்!

    தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது குறித்து அன்புமணி இராமதாஸ் அவர்கள், இத்தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றார்.

    மத்திய அரசின் ரத்து 

    தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 20 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 369 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது எனவும் ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது எனவும் அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது என்று தெரிவித்தார், அன்புமணி இராமதாஸ்.

    மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்ததையும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

    மேல்முறையீடு

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மருத்துவர் அமைப்புகள் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு என்றும் அவ்வுரிமையை இந்திய மருத்துவக் குழு தடுக்க முடியாது என்றும் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தீர்ப்பளித்ததையும் கூறினார்.

    high court

    “இதனடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 50% இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. அதன்படி, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை 07.11.2020 அன்று அப்போதைய அதிமுக அரசு பிறப்பித்தது.

    அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 2020-21ஆம் ஆண்டில் மட்டும் தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை நடப்பாண்டிற்கும் நீட்டிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்ட  உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு அதன் அரசாணைப்படியும், மாநில இட ஒதுக்கீட்டின்படியும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்று இன்று வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

    விலகிய தடை 

    உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்குகள், ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப் படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இருந்த தடை விலகியுள்ளது என்பதை பதிவிட்ட அன்புமணி இராமதாஸ் அவர்கள், இதற்கான அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதற்காக போராடிய பாட்டாளி மக்கள் கட்சி, நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார்.

    மேற்கூறியவற்றோடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும் போது தான், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் எனவும் உச்சநீதிமன்றத்தில் இதற்காக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படுவதை தமிழ்நாடு அரசும், மருத்துவர் அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.

    இதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

    50 சதவீதம் இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....