இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் பலருக்கும் பரீட்சியமானவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களை பலமாகவே கவர்ந்திழுத்தது என்றே கூறவேண்டும். தற்போதும் பலரும் இரும்புத்திரை திரைப்படத்தை குறித்து பேசுவதை நம்மால் ஆங்காங்கே காணமுடிகிறது.
இரும்புத்திரைக்கு பின் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் ஹீரோ! முழு சூப்பர் ஹீரோ திரைப்படமாக ஹீரோ இல்லை என்றாலும், திரைப்படம் வெகுவாக பலரை கவர்ந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஹீரோ ஒரு வெற்றித்திரைப்படமாக அங்கிகரிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், பி.எஸ்.மித்ரன் நடிகர் கார்த்திக் அவர்களை கதாநாயகனாக வைத்துக்கொண்டு சர்தார் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களில் நடிக்க முயலும் கார்த்தி அவர்களுக்கு காவல்துறை சார்ந்த கதாப்பாத்திரம் நன்கு பொருந்திவிட்டதாகவே தோன்றுகிறது. சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்த கார்த்திக் அவர்கள் சர்தார் திரைப்படத்திலும் காவல்துறை சார்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வெளிவந்திருக்க கூடிய சர்தார் திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்களும் அவற்றை வழிமொழிவதாகவே இருக்கின்றன.
தற்போது வெளிவந்திருக்கும் சர்தார் திரைப்படத்தின் புகைப்படங்களானது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. கார்த்திக் அவர்கள் மிடுக்கான தோற்றத்தில் இருப்பது பலரையும் ரத்னவேல் பாண்டியனையும், தீரனையும் நினைவுக்கு வரவழைக்கிறது. அதே சமயம் கார்த்திக் அவர்கள் தாடியுடன் இருப்பதை போன்ற புகைப்படமொன்று சர்தார் படப்பிடிப்பின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. தற்போது வெளிவந்திருக்க கூடிய புகைப்படங்களில் கார்த்திக் அப்படியாக இல்லை. இத்திரைப்படத்தில் கார்த்திக் இரு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் கதை என்னவாக இருக்குமென்று இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். சிறுத்தை திரைப்படத்தில் இரு வேடங்களில் கெத்து காட்டியதைப் போலவே சர்தார் திரைப்படத்திலும் கார்த்தி கெத்து காட்டுவாரா என்ற கேள்வியும் ஆவலும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
சர்தார் திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக ராஷி கன்னா அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் ராஜீஷா விஜயன் அவர்களும் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.